சிம்லா: ஜெயின் கோவிலுக்குள் குட்டை ஆடைகள் அணிந்து வர தடை; நோட்டீசால் பரபரப்பு
|இமாசல பிரதேசத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜெயின் கோவிலுக்குள் குட்டை ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபை சார்பில் செயல்படும், சமூகம் சார்ந்த பிரபல கோவில் ஒன்று உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த கோவிலின் வெளியே சமீபத்தில் நோட்டீஸ் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.
அதில், புதிய ஆடை விதிமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் கண்ணியம் வாய்ந்த உடைகளை கோவிலுக்கு அணிந்து வர வேண்டும்.
குட்டையான ஆடைகள், அரை கால் சட்டைகள், பெர்முடா, மினி ஸ்கர்ட், இரவு ஆடைகள், கிழிந்த ஜீன்ஸ், பிராக் போன்ற ஆடைகளை அணிந்து வருபவர்கள் கோவில் வளாகங்களுக்கு வெளியே மட்டுமே இறைவணக்கம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி கோவில் பூசாரிகளில் ஒருவரான பண்டிட் சஞ்சய் குமார் ஜெயின் கூறும்போது, கண்ணியம் காக்கவும், நல்ல நடைமுறைகளை பின்பற்றவும் மற்றும் இந்து கலாசார மதிப்புகளை பராமரிக்கவும் வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. அதற்காகவே இந்த நடவடிக்கை என தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், ஆடவர் துணையின்றி பெண்கள் வருவதற்கு டெல்லி ஜமா மசூதி பாதுகாப்பாளர்கள் அனுமதி மறுத்து நோட்டீஸ் ஒட்டியிருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. எனினும், போராட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எழுந்த கண்டனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து, அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டது.