எதிர்க்கட்சிகளின் திட்டம் பிரதமர் மோடியை தோற்கடிக்க நினைப்பது, ஆனால் ஆடுகளால் சிங்கத்துடன் சண்டையிட முடியாது - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே
|பிரதமர் மோடியை தோற்கடிப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் திட்டம் என்றும், ஆனால் ஆடுகளால் சிங்கத்துடன் சண்டையிட முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடுமையாக தாக்கினார்.
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி ஷிண்டே 2 நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு இந்தி செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார்.
சிங்கத்துடன் சண்டையிட முடியாது
அப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி ஷிண்டே கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிகளின் ஒரே திட்டம் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிப்பது தான். ஆனால் காட்டில் சிங்கத்திற்கு எதிராக ஆடுகள் ஒன்றிணைந்து சண்டையிட முடியாது. சிங்கம் எப்பொழுதும் சிங்கம் தான். அது காட்டை ஆளும்" என்றார்.
மராட்டிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஷிண்டே, "அஜித்பவார் எங்கள் கூட்டணியில் சேர்ந்த பிறகு எனது தலைமையிலான அரசு (பா.ஜனதா-சிவசேனா- அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்) 215-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பலத்தை பெற்றுள்ளது. இதனால் எனது அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்றார்.
அமலாக்கத்துறை துன்புறுத்தவில்லை
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பற்றி அவரை பெயரை குறிப்பிடாமல் விமர்சித்த ஷிண்டே, "நாங்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். தங்களுக்காக வேலை செய்பவர் வேண்டுமா அல்லது வீட்டில் உட்கார்ந்து கொள்பவர் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.
எதிர்க்கட்சி அணியில் உள்ள தலைவர்களை குறிவைக்க அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. யாரையும் துன்புறுத்தும் நோக்கில் அது செயல்படவில்லை" என்று முதல்-மந்திரி ஷிண்டே பதிலளித்தார்.