காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசிதரூர் நாளை வேட்புமனு தாக்கல்
|காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசிதரூர் எம்.பி. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் கடந்த 24-ந்தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. இதில் ஒன்றுக்கு மேற்பட்டோர் களத்தில் இருந்தால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்த தேர்தலில் போட்டியிடும் சசிதரூர் எம்.பி. நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தேர்தலில் தனக்கு ஆதரவு பெருகி வருவதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரபல உருது மொழி கவிஞர் மஜ்ரூ சுல்தான்புரியின் புகழ்பெற்ற கவிதையை தனது டுவிட்டர் தளத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். அதன்படி, 'நான் தனியாக எனது பயணத்தை தொடங்கினேன். மக்கள் தொடர்ந்து இணைவதால், எனது கூடாரம் பெருகிக்கொண்டே போகிறது' என குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர், 'நான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது எனக்கான ஆதரவை நீங்கள் பார்ப்பீர்கள். பெரும்பான்மையான மாநிலங்களில் இருந்து கட்சித் தொண்டர்களின் ஆதரவு கிடைத்தால் நானும் களத்தில் இருப்பேன். ஏனெனில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்' என கூறியுள்ளார்.