காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவா? சசிதரூரா? - இன்று ஓட்டு எண்ணிக்கை
|காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆகிறார்.
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.
இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.
ஓட்டு எண்ணிக்கை
ஓட்டுப்பெட்டிகளை டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு கொண்டு செல்லும் பணி நேற்று நிறைவடைந்தது. ஓட்டுப்பெட்டிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டன.
இந்தநிலையில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஓட்டு எண்ணிக்கை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.
வெவ்வேறு ஓட்டுப்பெட்டிகளில் உள்ள ஓட்டுச்சீட்டுகள் சேர்க்கப்படும். அதனால் ஓட்டுச்சீட்டுகள் அடிக்கடி ஒன்றோடொன்று கலக்கப்படும்.
தேர்தல் முடிவுகள் இன்றே வெளியாகும். அதனால், காங்கிரஸ் தலைவர் யார் என்பது இன்று தெரிந்து விடும்.
நேரு குடும்பத்தை சாராதவர்
தேர்தலில் போட்டியிடும் 2 பேரும் நேரு குடும்பத்தை சாராதவர்கள். கடந்த 1997 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் சீதாராம் கேசரி தலைவராக இருந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு, நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆகிறார். நீண்ட காலம் தலைவராக இருந்த சோனியாகாந்திக்கு மாற்றாக ஒருவர் தலைவர் ஆவதால், இத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
காங்கிரசின் 137 ஆண்டு கால வரலாற்றில் நடக்கும் 6-வது தலைவர் தேர்தல் இதுவாகும். முதலில், 1939-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மகாத்மா காந்தி ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமய்யாவை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தோற்கடித்தார்.
சோனியாவுக்கு எதிர்ப்பு
1950-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நேரு ஆதரவு பெற்ற ஆச்சார்ய கிருபளானியை சர்தார் வல்லபாய் படேல் ஆதரவாளரான புருஷோத்தம் தாஸ் தண்டன் தோற்டிகத்தார். 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சித்தார்த்த சங்கர் ரே, கரன்சிங் ஆகியோரை பிரமானந்த ரெட்டி வீழ்த்தினார். 1997-ம் ஆண்டு நடந்த தேர்தலில், சரத்பவார், ராஜேஷ் பைலட் ஆகியோரை சீதாராம் கேசரி தோற்கடித்தார். 2000-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நேரு குடும்பத்துக்கு முதல்முறையாக போட்டி எழுந்தது. சோனியாகாந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டார். அவர் படுதோல்வி அடைந்தார்.
அதன்பிறகு, 6-வது தடவையாக இத்தேர்தல் நடந்துள்ளது.