காங். தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: சசிதரூர் உள்பட 4 எம்.பிக்கள் வலியுறுத்தல்
|காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்று தெளிவாக தெரியவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியை ஏகமனதாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. மல்லிகார்ஜூன கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தேர்தலில் போட்டியிட வைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ராகுல் காந்தி தெளிவாக இது குறித்து கூறவில்லை.
ஒருவேளை ராகுல் காந்தி தனது மனதை மாற்றிக் கொள்ளாவிட்டால், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை தலைவர் தேர்தலில் களம் இறக்க சோனியா காந்தி திட்டமிட்டு உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் சசிதரூரும் போட்டியில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத் தனமையும், நேர்மையும் தேவை என்று வலியுறுத்தி சசி தரூர் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். செப்டம்பர் 6 தேதியிடப்பட்டு இந்த கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சசி தரூர், கார்த்தி சிதம்பரம், ப்ரத்யூதி போர்டோலோய், அப்துல் காலீக், மனீஷ் திவாரி ஆகியோர் இக்கடிதத்தை எழுதியுள்ளனர்.