பயங்கரவாதி ஷாரிக்கை கொல்ல சதித்திட்டம்
|மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்ட பயங்கரவாதி ஷாரிக்கை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் சிகிச்சை பெற்று வரும் பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்ட பயங்கரவாதி ஷாரிக்கை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் சிகிச்சை பெற்று வரும் பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மங்களூரு குண்டுவெடிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் வெடித்து சிதறியது. இதுபற்றி போலீசார், தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தின. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது அந்த குக்கர் சாதாரணமாக வெடிக்கவில்லை என்றும், அது குக்கர் வெடிகுண்டு என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அதை மங்களூருவில் கங்கனாடி ரெயில் நிலையம் அருகே மக்கள் அதிகம் கூடும் பகுதியில் வைத்து வெடிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்ததும், அந்த சதித்திட்டத்தை தீட்டி அரங்கேற்ற பயங்கரவாதி ஷாரிக் செயல்பட்டதும் தெரியவந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
ஆனால் எதேச்சையாக அவர் ஆட்டோவில் அந்த குக்கர் வெடிகுண்டை கொண்டு செல்லும்போதே அதிர்வுகள் ஏற்பட்டு வெடித்துவிட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், பயங்கரவாதி ஷாரிக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்கள் தனித்தனி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷாரிக், மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பயங்கரவாதி ஷாரிக் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தினமும் அவரைப்பற்றி புதுப்புது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி மக்களை பரபரப்பு அடையச் செய்கிறது. மனித வெடிகுண்டாக ஷாரிக் செயல்பட்டு இருக்கலாம் என்றும், அவர் உடுப்பி கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொலை செய்ய சதி
இந்த நிலையில் பயங்கரவாதி ஷாரிக்கை கொல்ல சதி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. போலீஸ் துறையில் உள்ள தகவல் சேகரிப்பு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒரு அறிக்கையை வழங்கி இருப்பதாகவும், அதில் பயங்கரவாதி ஷாரிக்கை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாகவும், இந்த செயலை செய்ய சிலீப்பர் செல்கள் தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஷாரிக்கை இயக்கியவர்களும் அவரை கொல்ல சதித்திட்ட தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாதர் முல்லர் ஆஸ்பத்திரி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பயங்கரவாதி ஷாரிக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொருவர் யார்?
இந்த நிலையில் மங்களூருவில் ஷாரிக் ஒரு பையுடன் சுற்றித்திரிவது போன்றும், அவருக்கு பின்னால் இன்னொருவர் முக கவசம் அணிந்தபடி நடந்து வருவதுபோன்றும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த நபர் யார்?, அவருக்கும், ஷாரிக்கிற்கும் என்ன தொடர்பு? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த நபர் தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பாதர் முல்லர் ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்த பின்னரே ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க ஷாரிக் குறித்து மற்றொரு தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஷாரிக், டிஜிட்டல் டெக்னாலஜி பாடத்தில் டிப்ளமோ படித்துள்ளார். மேலும் டிஜிட்டல் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தி அதன்மூலம் பயங்கரவாதத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருக்கிறார்
செல்போன் பயன்பாடு
டிப்ளமோவை படித்து முடித்த ஷாரிக், மைசூருவுக்கு வந்து செல்போன் பயன்பாடு மற்றும் அதை கையாளுதல், சரி செய்தல் உள்ளிட்ட செல்போனில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் மிகவும் நுணுக்கமாக கற்று தேர்ந்திருக்கிறார். இவ்வாறாக அவர் 2 மாதங்களாக பயிற்சி பெற்றிருக்கிறார். அதன்மூலம் அவர் செல்போன்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை தயாரித்து வெடிக்க செய்யவும் திட்டமிட்டு இருந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் செல்போன் குண்டுகளை தயாரித்து ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் அதை இயக்கி வெடிக்கச் செய்ய ஷாரிக் திட்டமிட்டு இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
1,200 வீடியோக்கள்
இதற்காக அவர் 2 மாதங்களில் மட்டும் 10 செல்போன்களை புதிதாக வாங்கி பயன்படுத்தி உள்ளார். பின்னர் அவற்றை விற்றுள்ளார். விற்பதற்கு முன்பு அதில் இருந்த அனைத்து தகவல்களையும் ஷாரிக் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தற்போது அந்த 10 செல்போன்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவற்றில் உள்ள தகவல்களை மீண்டும் எடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுதவிர தற்போது ஷாரிக்கிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் 1,200 வீடியோக்கள் இருந்ததாகவும், அந்த வீடியோக்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்தும், பயங்கரவாதத்தை தூண்டுதல், ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் குறித்தும் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விசித்திரமாக நடந்து கொண்டார்
கடந்த 4 வருடங்களாக ஷாரிக் வீட்டில் உள்ள நபர்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். மேலும் அவர்களை டி.வி.யை கூட பார்க்க விடமாட்டாராம். அவரது நடவடிக்கைகள் அனைத்தும் விசித்திரமாக இருந்துள்ளன. மேலும் வியாபாரியான ஷாரிக், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை கொண்டு சென்று வழங்கும் வேலையையும் செய்து வந்துள்ளார். அது ஹவாலா பணமா அல்லது சட்டவிரோத பணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஷாரிக் விசித்திரமாக நடந்து கொண்டது பற்றிய தகவல்களை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷாரிக்கின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரை குணப்படுத்த டாக்டர்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். ஷாரிக்கை மற்ற பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாமல், அவர் பூரண குணமடைந்தால் மட்டுமே குண்டுவெடிப்பு பற்றிய அனைத்து தகவல்களும் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.