தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே - சரத்பவார்
|தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல் படேல் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டார்.
1999-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகிய சரத்பவார் மற்றும் பி.ஏ. சங்மா ஆகியோர், அதே ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினர்.
கட்சியின் நிறுவன நாள்
சரத்பவார் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரசின் 25-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று டெல்லியில் நடந்தது. இதில் சரத்பவார் கட்சியின் தேசிய செயல் தலைவராக தனது மகள் சுப்ரியா சுலே எம்.பி.யை அறிவித்தார். மேலும் அவரை கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவராகவும் நியமித்தார். தேர்தல் குழு தலைவர் என்பதால், தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும்.
பிரபுல் படேல்
இதேபோல கட்சியின் மற்றொரு தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் படேலையும் சரத்பவார் அறிவித்தார். இதில் புதிய செயல் தலைவரான சுப்ரியா சுலேக்கு மராட்டியம், அரியானா, பஞ்சாப் மாநில பொறுப்புகள் மற்றும் பெண்கள் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. பிரபுல் படேலுக்கு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், கோவா மாநிலங்களின் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
மகளுக்கு அதிக முக்கியத்துவம்
சமீபத்தில் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக சரத்பவார் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வற்புறுத்தலால் அவர் தனது முடிவை திரும்ப பெற்றார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு இறுதியில் மராட்டிய சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ், தேசிய கட்சி என்ற அந்தஸ்தையும் சமீபத்தில் இழந்தது. இதனை கவனத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், மேற்கண்ட புதிய நியமனங்களை சரத்பவார் அறிவித்து உள்ளார். குறிப்பாக கட்சியில் அவரது மகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
அஜித்பவாருக்கு புதிய பொறுப்பு இல்லை
அதேவேளையில் மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ள சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கவில்லை. அஜித்பவார் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முயற்சித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.
இருப்பினும் அஜித்பவார் முன்னிலையிலேயே புதிய நியமனங்களை சரத்பவார் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.