நவ.11ம் தேதி ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் காங்., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
|நவம்பர் 11ம் தேதி ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் காங்., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மும்பை,
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை (பாரத் ஜோடோ) நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது நடைபயணம் கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானா சென்றடைந்தது. இந்த நிலையில் ராகுல்காந்தி நடைபயணம் மராட்டியத்திற்குள் நுழைந்துள்ளது.
இதையடுத்து நான்டர் மாவட்டம் வந்த ராகுல் காந்தியை மாநில காங். நிர்வாகி அசோக் சவான் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ச்சியாக காங்., எம்.பி ராகுல், கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மராட்டிய மாநிலத்தின் நாந்தேட்டில் இருந்து நேற்று பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கினார். அப்போது, மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அசோக் சவான், "தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே ஆகிய காங்., கூட்டணி கட்சியின் தலைவர்கள் வரும் நாளை மறுநாள் (நவ., 11ம் தேதி) இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்வார்கள். இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை (நவ.,10) பங்கேற்கின்றனர். இதேபோன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே மற்றும் ஜிதேந்திரா ஆவாத் ஆகியோர் பாதயாத்திரையில் நாளை கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.