4-ம் வகுப்பு வரை என் தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார் - டெல்லி பெண்கள் ஆணைய தலைவர்
|டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலும் பாலியல் தொல்லை அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பு, 8-வது வயதில் தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலும் அதே அனுபவத்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் மகளிர் தின பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் குழந்தையாக இருந்தபோது என் தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது மிகவும் சின்ன குழந்தையாக இருந்தேன். பாலியல் தொல்லையுடன் என் தந்தை என்னை அடிப்பார். என் ஜடையை பிடித்து இழுத்து சுவரில் மோத வைப்பார். முகத்தில் இருந்து ரத்தம் கொட்டும். 4-ம் வகுப்பு வரை அவரது தொல்லை நீடித்தது.
அப்போதெல்லாம் அவருக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். அச்சமயத்தில், இதுபோன்றவர்களுக்கு பாடம் கற்பிக்கவும், பெண்களுக்காக போராடவும் உறுதி எடுத்துக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.