மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது
|பண்ட்வால் அருகே மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு;
மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா மாணி பகுதியில் மைனர் பெண் ஒருவள் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இதேபோல் அதேப்பகுதியில் வசித்து வருபவர் அனுஷ்நாயக்(வயது 35).
இவர், வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில் அனுஷ்நாயக்குடன் மைனர் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் அனுஷ்நாயக், மைனர் பெண்ணை தனது காரில் குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து டாக்டர் அனுஷ்நாயக், மைனர் பெண்ணிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பயந்துபோன மைனர் பெண், தனது தாயிடம் நடந்த விஷயத்தை கதறி அழுதபடி கூறியுள்ளார்.
கைது
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மைனர் பெண்ணின் தாய், டாக்டர் அனுஷ்நாயக்கை கண்டித்ததாக கூறப்படுகிறது.அப்போது டாக்டர் அனுஷ்நாயக் மைனர் பெண்ணுக்கும், அவரது தாய்க்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மைனர் பெண்ணின் தாய், விட்டலா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அனுஷ்நாயக்கை கைது செய்தனர். கைதான அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.