மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்
|மேற்குவங்காள கவர்னர் ஆனந்த போஸ், பாலியல் சீண்டல், துன்புறுத்தல் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா,
கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக ஆனந்த போஸ் பணியாற்றி வருகிறார்.
மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும், மத்திய துணைக் காவல் ஆணையர் (டிசிபி) ஒருவரும் அங்கு சென்றுள்ளதாகவும் தெரிகிறது.
எனினும், கவர்னருக்கு எதிரான புகாருக்கான காரணம் குறித்து மேலும் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ராஜ்பவனின் நிர்வாகப் பகுதியில் அந்த பெண் இந்தப் புகாரை அளித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"ராஜ் பவன் ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்குச் சொந்தமானது என்பதால், அங்கிருந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணை ஹேர் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்குச் செல்லும்படி கூறினர். அதன் பிறகு, அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்" என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பாக மேற்கு வங்காள கவர்னர் மாளிகை, சி.வி.ஆனந்த போஸ் கூறியதாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உண்மை வெல்லும். கட்டமைக்கப்பட்ட கதைகளால் நான் பயப்படுவதை மறுக்கிறேன். யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். ஆனால், மேற்கு வங்காளத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் தடுக்க முடியாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.