50 ஆண்கள்.. ஆபாச வீடியோ எடுத்து ரூ.35 லட்சம் பணம் பறித்த கும்பல் கைது; மாடல் அழகி தலைமறைவு
|கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
மும்பையை சேர்ந்த மாடல் அழகி நேஹா என்ற மெஹர் ஆசை வார்த்தை கூறி 50க்கும் மேற்பட்ட ஆண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
மெஹர் என்ற பெண், டெலிகிராம் செயலியில் என்னை தொடர்பு கொண்டார். பின்னர் இருவரும் வாட்ஸ்அப்பில் பேச தொடங்கினோம். அப்போது, தனது கணவர் துபாயில் பணிபுரிவதாகவும், உடலுறவில் ஈடுபட விருப்பம் இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்தார். அவர் தனது புகைப்படங்கள் மற்றும் அவரது முகவரியையும் கொடுத்தார்.
அதன்படி மார்ச் 3 அன்று மாலை 3.30 மணியளவில், நான் மெஹரின் இல்லத்திற்குச் சென்றேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் நாங்கள் இருந்த படுக்கையறைக்குள் நுழைந்து, என்னை விசாரித்தனர். பின்னர் அவர்கள் என்னை தாக்க தொடங்கினர்.
ரூ.3 லட்சம் தராவிட்டால், என்னை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, மெஹரை திருமணம் செய்து வைத்துவிடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டியது. இதை தொடர்ந்து போன்பே பேமெண்ட் செயலி மூலம் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு 21,500 ரூபாய் பரிமாற்றம் செய்தேன்.
இரவு 8 மணி வரை என்னை அந்த கும்பல் சிறைபிடித்து வைத்திருந்தது. பின்னர் அவர்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மூலம் கூடுதலாக 2.5 லட்சம் ரூபாய் கேட்டனர். கிரெடிட் கார்டு வீட்டில் இருப்பதாக கூறியபோது அவர்கள் அதை எடுக்க என்னுடன் வந்தனர். அபோது ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பினேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த மோசடி கும்பலின் வலையில் சிக்கியதாகவும், மிரட்டல் மூலம் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் அந்த மோசடி கும்பல் குவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுவரை, அந்த மோசடி கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் மெஹரின் இருப்பிடம் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.