சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; மாவட்ட கலெக்டர் செல்வமணி உத்தரவு
|சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டார்.
சிவமொக்கா;
கிராம தங்கல் நிகழ்ச்சி
கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று தங்கி மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்படுகிறது. அந்தவகையில் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா பெள்ளூரு கிராமத்தில் கலெக்டரின் கிராம தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் மாவட்ட கலெக்டர் செல்வமணி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கலெக்டர் செல்மணிக்கு கிராம மக்கள் மரியாதை செய்து வரவேற்றனர்.
கிராம தங்கல் நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் செல்வமணி பெற்று கொண்டார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அப்போது கிராம மக்கள், கிராமத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், சிறுவர்கள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். மேலும், இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்றனர். இதையடுத்து, கலெக்டர் செல்வமணி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக கலெக்டர் செல்வமணி, அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அவர், பள்ளி வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, சில அறிவுரைகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்.
விவசாயிகளிடம்...
விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர், விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டர் செல்வமணி கூறினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் மாவட்ட கலெக்டர் நாகேந்திரா, வட்டார அதிகாரிகள், தாசில்தார், பஞ்சாயத்து முதன்மை அதிகாரிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கிராம தங்கல் நிகழ்ச்சியை முடித்து விட்டு கலெக்டர் செல்வமணி அலுவலக பணிகளுக்காக சிவமொக்காவிற்கு திரும்பினர்.