< Back
தேசிய செய்திகள்
இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் சேவா சிந்து இணையதள சர்வர் முடங்கியது
தேசிய செய்திகள்

இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் சேவா சிந்து இணையதள 'சர்வர்' முடங்கியது

தினத்தந்தி
|
20 Jun 2023 12:15 AM IST

இலவச மின்சார திட்டத்தில் சேர ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் சேவா சிந்து இணையதள சர்வர் முடங்கியது.

பெங்களூரு:

இலவச மின்சார திட்டத்தில் சேர ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் சேவா சிந்து இணையதள சர்வர் முடங்கியது.

200 யூனிட் இலவச மின்சாரம்

கர்நாடக காங்கிரஸ் அரசு, பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. வருகிற 1-ந்தேதி முதல் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் பெங்களூரு ஒன், கர்நாடக ஒன், கிராம ஒன் மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேவா சிந்து இணையதள முகவரியிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். நேற்று முன்தினம் முதல் இந்த மின்சார திட்டத்தில் விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது. முதல் நாளிலேயே 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில் பெரும்பாலான நகர மக்கள் சேவா சிந்து இணையதள மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். கிராமப்புற மக்கள் கர்நாடக ஒன் மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

படையெடுத்த மக்கள்

2-வது நாளாக நேற்றும் இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுமக்கள் மாநிலம் முழுவதும் கர்நாடக ஒன், கிராம ஒன் மையங்களில் கூட்டம் அலைமோதியது. பெங்களூருவிலும் பெங்களூரு ஒன், கர்நாடக ஒன் மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.

பெங்களூரு ஒன், கர்நாடக ஒன், கிராம ஒன் மையங்களிலும், கம்ப்யூட்டர் சென்டர்கள் மூலமாகவும் சேவா சிந்து இணையதளத்தை பயன்படுத்தி தான் இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பித்ததால், அந்த இணையதள சர்வர் முடங்கி போனது.

வாக்குவாதம்

இதனால் இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பிக்க சென்ற பெண்கள், முதியவர்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்து நின்றனர். இருப்பினும் சர்வர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இதனால் பல இடங்களில் மையங்களில் இருந்த ஊழியர்களுடன் ெபாதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.

சேவா சிந்து இணையதள சர்வரின் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும், கூடுதல் மையங்களை திறந்து சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2.14 கோடி பயனாளிகள்

கர்நாடகத்தில் மொத்தம் 2 கோடியே 16 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதில் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் 2 கோடியே 14 லட்சம் பேர் பயனடைய உள்ளனர். 2 லட்சம் மின் இணைப்புகள் உடையோர் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் தடுப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, சேவா சிந்து இணையதள சர்வர் முடங்கி இருப்பதால், இதை பயன்படுத்தி சைபர் மோசடி கும்பல்கள் தாங்கள் இலவச மின்சார திட்டத்தில் சேர விண்ணப்பித்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்