வயதான பெற்றோரை கவனிக்க அழைத்து வரப்பட்ட வேலைக்கார பெண் கற்பழிப்பு; தனியார் நிறுவன ஊழியர் கைது
|பெங்களூருவில் வயதான பெற்றோரை கவனிக்க அழைத்து வரப்பட்ட வேலைக்கார பெண் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரப்பன அக்ரஹாரா:
21 வயது இளம்பெண்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கூட்லு பகுதியில் வசித்து வருபவர் பரசிவமூர்த்தி (வயது 47). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பரசிவமூர்த்திக்கு வயதான தந்தை, தாய் உள்ளனர். அவர்களை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலைக்காகவும் பெண் வேண்டும் என்று முடிவு செய்தார்.
வேலைக்கார பெண் வேண்டும் என்று வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பரசிவமூர்த்தி கேட்டு இருந்தார். அதன்படி, அந்த நிறுவனமும் 21 வயது இளம்பெண்ணை அனுப்பி வைத்தது. அதன்படி, அந்த இளம்பெண்ணும் வேலை செய்து வந்துள்ளனர்.
கற்பழித்து மிரட்டல்
இந்த நிலையில், வீட்டில் இளம்பெண் தனியாக இருக்கும் போது, அவரை பரசிவமூர்த்தி கற்பழித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் நடந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமோ, வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று பரசிவமூர்த்தி இளம்பெண்ணை மிரட்டி இருந்தார். இதனால் அந்த இளம்பெண், இதுபற்றி முதலில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். பின்னர் தன்னை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்தின் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் பற்றி இளம்பெண் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி, இதுகுறித்து உடனடியாக பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசிவமூர்த்தியை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.