< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் எம்.பி.யின் தனி நாடு கருத்து.. மன்னிப்பு கேட்கவேண்டும்: பியூஷ் கோயல் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி.யின் தனி நாடு கருத்து.. மன்னிப்பு கேட்கவேண்டும்: பியூஷ் கோயல் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
2 Feb 2024 12:11 PM IST

இடைக்கால பட்ஜெட் குறித்து நேற்று கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் குமார், தனி நாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.

புதுடெல்லி:

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. டி.கே.சுரேஷ் குமார், தனி நாடு குறித்து பேசியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என பா.ஜ.க. எம்.பி. பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

பின்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுபற்றி விளக்கம் அளித்தார். "நாட்டை பிளவுப்படுத்துவது தொடர்பாக யார் பேசினாலும், அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒன்றுதான், ஒன்றாக இருப்போம்" என்றார்.

இடைக்கால பட்ஜெட் குறித்து நேற்று கருத்து தெரிவித்த எம்.பி. டி.கே.சுரேஷ் குமார், தென்னிந்தியாவுக்கு அனைத்து நிலைகளிலும், அனைத்து விவகாரங்களிலும் அநீதி இழைக்கப்படுவதாகவும், தனி நாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

"எங்களுடைய பணம் எங்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். அது ஜி.எஸ்.டி.யோ, சுங்க வரியோ அல்லது நேரடி வரியோ, எங்களுடைய சரியான பங்கு எங்களுக்கு வேண்டும். வளர்ச்சிக்கான எங்களுடைய பங்கு பணம், வடஇந்தியாவுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. வருகிற நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்காவிட்டால், இந்தி பேசும் பகுதிகள் நம் மீது கட்டாயப்படுத்தும் சூழல் காரணமாக, தனி நாடுக்கான கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்