செந்தில்பாலாஜி ஜாமீன் மேல்முறையீடு மனு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
|ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவர் ஜாமீன் கேட்டு 3 முறை தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தலா ஒருமுறை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவையும் தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, விசாரணை நீதிமன்றம் அவர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்கவும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் ராம்சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
இதில் செந்தில் பாலாஜியின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் ஆஜராகி, 'இந்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கவும், 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என வாதிட்டார்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். விசாரணை 3 மாதங்களுக்குள் நிறைவடைய வாய்ப்பு இல்லை என்பதால் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது' என்றும் தெரிவித்தனர்.