< Back
தேசிய செய்திகள்
அதிகமான தரவுகளை பெறவே ஒருவர் கைது செய்யப்படுகிறார் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கருத்து- 2வது நாள் விசாரணை முழு விவரம்
தேசிய செய்திகள்

"அதிகமான தரவுகளை பெறவே ஒருவர் கைது செய்யப்படுகிறார்" செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கருத்து- 2வது நாள் விசாரணை முழு விவரம்

தினத்தந்தி
|
27 July 2023 5:15 PM IST

சுப்ரீம் கோர்ட்டில் 2 வது நாளான இன்று அமலாக்கத்துறைக்கு காவலில் எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதற்கான வாதங்களை முன்வைத்து வருகிறார் கபில் சிபல்.

புதுடெல்லி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது எனவும், அவரை காவலில். எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வக்கீல் கபில் சிபல் வாதிட்டார். அதன் தொடர்ச்சியாக, 2 வது நாளான இன்று அமலாக்கத்துறைக்கு காவலில் எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதற்கான வாதங்களை முன்வைத்து வருகிறார் கபில் சிபல்.

அதன் விவரம் வருமாறு;-

அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளாக கருதப்பட்டால், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும்; ஆனால், அவ்வாறு இருந்தால் அது பிஎம்எல்ஏ சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது.

தீபக் மகாஜன் வழக்கை மேற்கோள் காட்டிய கபில் சிபல், "தீபக் மகாஜன் வழக்கில், ஒரு நபர் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் ஒரு 'நபர்' என்று குறிப்பிடப்பட்டார் 'குற்றம் சாட்டப்பட்டவர்' என்று இல்லை. அவரை நீதிமன்றக் காவலுக்கு கூட அனுப்ப முடியவில்லை. இப்போது இங்கு பிரச்சனை, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் அனுப்ப முடியுமா என்பதுதான்.

எனது கற்றறிந்த நண்பர் (சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா) தீபக் மகாஜனைப் பற்றிப் பூசி மெழுகினார். மூன்றாவது நீதிபதி கூட தீபக் மகாஜனைப் பற்றி பேசவில்லை. நாங்கள் சொல்வது, சட்டப்படி நீதிமன்றக் காவலுக்கு மட்டுமே பொருந்தும். அமலாக்கத்துறையினர் நீதிமன்ற காவல் மட்டுமே கோர முடியும்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுந்தரேஷ், கைது செய்வதை தண்டனையாக கருத முடியாது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது. கைது செய்யப்படுவது விசாரணை நோக்கத்திற்காகத்தான். அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றன என கருத்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து வாதாடிய கபில் சிபல், "என் கவலை என்ன என்றால், இந்தச் சட்டம் போதுமான அளவு பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

நான் என்னுடைய தரப்புக்காக நிற்கிறேன், அவர் தோல்வியடையலாம் அல்லது வெல்லலாம். அது வேறு கதை.." என்றார் கபில் சிபல்.

அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசியல் ரீதியாக வாதங்களைச் செய்யாமல், உண்மைகள் மற்றும் சட்டங்களுக்குள் நாம் செல்வோம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு. ஆகஸ்ட் 1 ந்தேதி மதியம் ஒரு மணி நேரத்தில் வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்