செந்தில் பாலாஜி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது
|செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு.
புதுடெல்லி,
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்று கூறி, அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகிவிட்டதால், போலீஸ் காவல் கோரும் அவகாசம் காலாவதியாகிவிட்டது. எனவே இனி நீதிமன்ற காவலை மட்டுமே விதிக்க முடியும். கோர்ட்டுக்கு வழக்கு வந்த பிறகு 2 மாதங்கள் கடந்து விட்டால், கடந்த நாட்கள் கடந்தது தான். நீதிமன்ற காவலில் இருக்கும் நபரை விசாரிக்கக்கூடாது என்பதில்லை. முறையாக விண்ணப்பம் தாக்கல் செய்து தான் பின்பு விசாரிக்க முடியும். சட்டம் அளிக்காத விலக்கை கோர்ட்டு அளிக்க முடியாது என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், போலீஸ் காவல் விதிக்க முடியாதா? என கேட்டபோது, வக்கீல் முகுல் ரோத்தகி, 15 நாட்களுக்கு பிறகு போலீஸ் காவல் விதிக்கக்கூடாது என்பது இன்றைய சட்டமாக உள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது. மருத்துவ அறுவை சிகிச்சை முடிந்து, சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை ஏதாவது ஒரு நாளில் அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என தெரிவித்து வாதத்தை நிறைவு செய்தார்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அமலாக்கத்துறையின் வாதங்களை இன்று (புதன்கிழமை) முன்வைக்க சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு அனுமதி அளித்து விசாரணையை தள்ளிவைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்க துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்
அப்போது அவர் கூறியதாவது:-
செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார், இடையூறுகளை விளைவித்தார். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்ததால் அவர் அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டு அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலங்களை பெற முயற்சித்தோம், ஆனால், அவர் எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்க துறைக்கு இருக்கும் உரிமை, அதை யாராலும் மறுக்க முடியாது.
தற்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் விசாரணை பாதிக்கப்படும். கைதுக்கான காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டோம். அமலாக்க துறை விசாரணை ஏன் தேவைப்படுகிறது? என்பதற்கான காரணங்களையும் விளக்கி விட்டோம். தான் தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினாலும் உடலில் எந்த காயங்களையும் அவர் நீதிபதியிடம் காட்டவில்லை" என்று வாதங்களை அடுக்கினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.