பினராயி விஜயன் குறித்து ஜனாதிபதி, பிரதமருக்கு பரபரப்பு புகார் கேரள கவர்னர் அனுப்பினார்
|கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே சமீப காலமாக அதிகார போட்டி நிலவி வருகிறது
திருவனந்தபுரம்,
கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே சமீப காலமாக அதிகார போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரி பினராயி விஜயனும், கவர்னரும் நேருக்கு நேர் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். துணை வேந்தர் நியமனங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைப்பது உள்ளிட்ட மசோதாவை கேரள அரசு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் இதுவரை கையெழுத்து போடவில்லை. இதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் நீதித்துறையை விட தனக்கு அதிக அதிகாரம் இருப்பதாக கவர்னர் கருதுகிறார் என்றும், சர்வாதிகாரி போல செயல்பட முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு கவர்னர் ஆரிப் முகமதுகான் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "கடந்த மாதம் பினராயி விஜயன் கனடா, இங்கிலாந்து, துபாய் உள்பட வெளிநாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் சென்றது தொடர்பாக தன்னிடம் முறைப்படி எதுவும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்-மந்திரிக்கு பதிலாக யாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்ற விவரமும் தெரிவிக்கப்பட வில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் "என்று கூறப்பட்டுள்ளது.இது கேரள அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.