< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு: பா.ஜ.க. வியூகம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு: பா.ஜ.க. வியூகம்

தினத்தந்தி
|
2 Jan 2024 11:00 AM GMT

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியும் தோற்கடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

புதுடெல்லி:

2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பா.ஜ.க., 3வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் இன்று பா.ஜ.க. மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சுனில் பன்சால், மத்திய மந்திரிகள் பூபேந்தர் யாதவ், அஷ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா மற்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வரும் தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதன்மூலம் சுமார் 100 மூத்த நிர்வாகிகளுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியும் தோற்கடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்காக இந்தியா (I.N.D.I.A) என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சியின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அடுத்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான அரசியல் சூழல்கள் நிலவுவதால் அதற்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த முறை பாஜக கூட்டணிக்கு, இந்தியா கூட்டணி கடும் சவாலாக இருக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்