பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வின்போது தேர்வு அறையில் 'செல்பி' எடுத்த பெண் கண்காணிப்பாளர்
|பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வின்போது தேர்வு அறையில் பெண் கண்காணிப்பாளர் ‘செல்பி’ எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
விஜயாப்புரா:
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வையொட்டி தேர்வு அறை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு அறை கண்காணிப்பாளர், தேர்வு நடைபெறும் அறையில் மாணவர்களுடன் செல்பி எடுத்த சம்பவம் நடந்துள்ளது. விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகா தேவனான் பகுதியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வுக்காக மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது அந்த அறைக்கு சமூக மேம்பாட்டு துறை அதிகாரி நிர்மலா மேற்பார்வைக்காக வந்தார். அவர் தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
அந்த சமயத்தில் அவர் தனது செல்போனில் மாணவர்களுடன் செல்பி எடுத்தார். அந்த படத்தை தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டார். அந்த புகைப்படம் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன்பேரில் அதிகாரிகள், கண்காணிப்பாளர் நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவரிடம் துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி தேர்வு அறையில் கண்காணிப்பாளர், செல்போன் பயன்படுத்தி சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.