< Back
தேசிய செய்திகள்
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு சுயசார்பு மிக முக்கியம்:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்
தேசிய செய்திகள்

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு சுயசார்பு மிக முக்கியம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

தினத்தந்தி
|
9 Dec 2023 4:29 PM GMT

சர்வதேச வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறையும் வகையில் நான் எதுவும் கூற வரவில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் 96-வது வருடாந்திர பொது கூட்ட நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் வளர்ச்சியானது, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுக்கான தலைமைத்துவத்தின் கீழ், நூறு கோடிக்கும் கூடுதலான இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் திறமையின் முடிவால் கிடைத்தது என உறுதிப்பட கூறினார். வளர்ச்சியை ஊக்குவித்து, வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்வதற்கான வழிமுறையாகவும் இந்த வளர்ச்சிக்கான இயந்திரம் உள்ளது என்றும் பேசினார்.

20-ம் நூற்றாண்டில், உலகளவில் வளர்ச்சி இயந்திரத்திற்கான நாடாக அமெரிக்கா தனது பங்கை ஆற்றியது. 21-ம் நூற்றாண்டின் முதல் 15 முதல் 20 ஆண்டுகாலத்தில் அதே பணியை சீனா செய்து வந்தது. உலகில் தற்போது, விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

அதனால், உலகின் பிற நாடுகளின் வளர்ச்சியில் ஒரு பெரிய நேர்மறை தாக்கம் ஏற்படுத்த கூடிய ஓரிடத்திற்கு இந்தியாவின் வளர்ச்சி வந்தடைந்து உள்ளது தெளிவாக தெரிகிறது. அதனாலேயே, வளர்ச்சி இயந்திரம் என இந்த தருணத்தில் இந்தியா அழைக்கப்படுகிறது. அது சரியானதும் கூட என்று அவர் பேசியுள்ளார். 21-ம் நூற்றாண்டை இந்தியாவுக்கான நூற்றாண்டாக மாற்ற அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வர்த்தக தலைவர்கள் வரவேண்டும் என அழைப்பும் விட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசும்போது, சர்வதேச வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறையும் வகையில் நான் எதுவும் கூற வரவில்லை. சர்வதேச விநியோக சங்கிலியை பற்றி நான் அறியாமல் இல்லை. ஆனால், இந்தியாவில் பெரிய அளவிலான வர்த்தகம் நடைபெறுவதற்கு, இந்திய விநியோக சங்கிலியை கட்டமைக்க உதவுவது, இந்திய விற்பனையாளர்களுக்கு ஆதரவளிப்பது ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது என நான் நினைக்கிறேன்.

ஏனெனில், இது இல்லாமல் எந்தவொரு நாடும் வலிமையடையாது. ஒரு நாட்டுக்கு விநியோக சங்கிலி இல்லையென்றால், அடிப்படை தேவைகள் இல்லையெனில், ஒரு பெரிய பொருளாதாரம் மற்றும் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு, நோக்கங்கள் மற்றும் வருங்காலம் ஆகியவற்றை கொண்ட ஒரு நாட்டுக்கு, ஆத்மநிர்பார் (சுயசார்பு) என்பது மிக மிக முக்கியம் என பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்