உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.16 லட்சம் பொருட்கள், பணம் பறிமுதல்
|கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து வந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோலார் தங்கவயல்:
கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து வந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ரகசிய தகவல்
கோலார் (மாவட்டம்) டவுனில் இருந்து சீனிவாசப்புரா சாலையில் சட்டவிரோதமாக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவதாக சீனிவாசப்புரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீனிவாசப்புரா போலீஸ் இன்ஸ்பெக்டர் விட்டல் வி.தல்வார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மமதா மற்றும் போலீசார் அதிரடியாக கோலார்-சீனிவாசப்புரா சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வாகனம் மற்றும் ஒலிபெருக்கி பொருத்திய வாகனங்கள் அவ்வழியே வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.
3 பேர் மீது வழக்கு
அப்போது அந்த வாகனங்களில் ரூ.2 லட்சம் ரொக்கம், சேலைகள், குக்கர்கள், மிக்சிகள், ஒலிபெருக்கிகள் இருந்தன. அவற்றுக்கான உரிய ஆவணம் எதுவும் வாகனங்களில் வந்த டிரைவர்களிடம் இல்லை. இதையடுத்து ரூ.2 லட்சம் ரொக்கம், சேலைகள், குக்கர்கள், மிக்சிகள், ஒலிபெருக்கிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வாகன டிரைவர்களான மகாந்தேஷ்(வயது 38), வீரபத்ரப்பா(40), கிளீனர் சங்கர்(29) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.11 லட்சம் பறிமுதல்
இதுபோல் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுனில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது டிரைவரின் இருக்கைக்கு அடியில் ஒரு பை இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர்.
அதில் ரூ.11 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் டிரைவரிடம் இல்லை. இதையடுத்து ரூ.11 லட்சத்தையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மேற்கண்ட 2 சம்பவங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.