< Back
தேசிய செய்திகள்
பாலியல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள சித்ரதுர்கா மடாதிபதிக்கு திடீர் உடல்நலக்குறைவு
தேசிய செய்திகள்

பாலியல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள சித்ரதுர்கா மடாதிபதிக்கு திடீர் உடல்நலக்குறைவு

தினத்தந்தி
|
21 Sept 2022 12:15 AM IST

பாலியல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள சித்ரதுர்கா மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிக்கமகளூரு:

பாலியல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள சித்ரதுர்கா மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மடாதிபதி கைது

சித்ரதுர்காவில் முருக மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு(வயது 64) இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த மடத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது 2 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். அதாவது மைசூருவில் உள்ள மடத்திற்கு சொந்தமான பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிகள் மைசூரு போலீசாரிடம் மடாதிபதி மீது பாலியல் புகார் கொடுத்திருந்தனர். பின்னர் அந்த புகார் சித்ரதுர்கா போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சித்ரதுர்கா போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை போக்சோவில் கைது செய்தனர்.

நீதிமன்ற காவல்

பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சித்ரதுர்கா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவர் ஜாமீன் கோரி சித்ரதுர்கா கோர்ட்டில் கடந்த 14-ந் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து வருகிற 27-ந் தேதி வரை மடாதிபதிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை மீண்டும் சித்ரதுர்கா மாவட்ட சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் மனு நிராகரிப்பு

இதற்கிடையே சித்ரதுர்கா கோர்ட்டில் மடாதிபதி சார்பில் ஜாமீன் கோரி மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு கடந்த 16-ந் தேதி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி மீண்டும் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதனால் மீண்டும் அவர் சித்ரதுர்கா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வரும் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீதிபதி உத்தரவு

இதையடுத்து அவர் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள மெக்கான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதுபற்றி அவர்கள் சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் இதுபற்றி நீதிபதியிடம் கூறி அனுமதி கேட்டனர்.

மேலும் மனுவும் கொடுத்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட போக்சோ கோர்ட்டு நீதிபதி கோமளா, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கினார். அவரது உடல்நிலை சரியானதும் இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மீண்டும் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு

பாலியல் புகாரில் சிக்கிய மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, போலீசாரால் முதன்முதலில் கைது செய்யப்பட்ட உடனேயே தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது போலும், நெஞ்சு வலியால் அவதிப்படுவது போலும் காட்டிக் கொண்டார். ஆனால் அவருக்கு போலீசார் மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் சிறையில் அடைத்தனர். தற்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சிவமூர்த்தி முருகா சரணரு சார்பில் மீண்டும் ஜாமீன் கோரி சித்ரதுர்கா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்