ரூ.5 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான மடாதிபதி, ஒடிசாவில் கைது
|தொழில் அதிபரிடம் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவான மடாதிபதியை, ஒடிசாவில் பதுங்கி இருந்தபோது போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
தொழில் அதிபரிடம் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவான மடாதிபதியை, ஒடிசாவில் பதுங்கி இருந்தபோது போலீசார் கைது செய்தனர்.
ரூ.5 கோடி மோசடி
உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்தவர் தொழில் அதிபரான கோவிந்தபாபு பூஜாரி. இவரிடம், பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்து அமைப்பு பெண் பிரமுகர் சைத்ரா குந்தாப்புரா உள்பட 8 பேரை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மடாதிபதி அபினவ காலஸ்ரீவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து மடாதிபதி சார்பில் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மடாதிபதியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் மடாதிபதி அபினவ காலஸ்ரீ, ஒடிசாவில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் ஒடிசா விரைந்தனர். அங்கு ஒடிசா மாநில போலீசாரின் உதவியுடன் மடாதிபதியை தேடிவந்தனர். புவனேஷ்வரியில் இருந்து புத்தகயா நோக்கி செல்லும் ரெயிலில் மடாதிபதி பயணம் செய்வது பற்றி போலீசாருக்கு தெரிந்தது.
காவலில் எடுத்து...
உடனே அவர்கள் ரெயிலில் பயணம் செய்த மடாதிபதியை சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து மடாதிபதியை குற்றப்பிரிவு போலீசார் நேற்று மாலையில் விமானம் மூலம் பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அவரை பெங்களூரு கோர்ட்டில் இன்று(புதன்கிழமை) ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மடாதிபதி கைதானது பற்றி போலீசார் கூறுகையில், 'மடாதிபதி தலைமறைவான உடன், காவி ஆடைகளை கழற்றிவிட்டு, டீ-சர்ட் போன்று நாகரீக ஆடைகளை அணிந்து போலீசிடம் இருந்து தப்பித்து உள்ளார். அவர் பெங்களூருவில் இருந்து ஒடிசாவுக்கு ரெயிலில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து புத்தகயா நோக்கி சென்றுள்ளார். அப்போது கட்டாக் பகுதியில் வைத்து ஒடிசா போலீசார் உதவியுடன் மடாதிபதி கைது செய்யப்பட்டார். அவர் தலைமறைவுக்கு பிறகு மட்டும் 4 செல்போன்கள், 4 சிம்கார்டுகளை மாற்றி வந்துள்ளதும் விசாரணையில் தெரிந்துள்ளது' என்று கூறினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சைத்ரா குந்தாப்புரா டிஸ்சார்ஜ்
இதற்கிடையே கைதான இந்து அமைப்பு பெண் பிரமுகர் சைத்ரா குந்தாப்புராவிடம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை போலீசார் மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு உடல் நலம் சீராக இருப்பதாகவும், வலிப்பு நோய் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டது. எனினும் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து சைத்ரா குந்தாப்புரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் மோசடி குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.
இந்த வழக்கில் கைதான ககன் கடூரை உள்ளிட்ட 7 பேரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோசடிக்கு ககன் கடூரு மூளையாக செயல்பட்டாரா?
மோசடி வழக்கில் கைதான ககன் கடூரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்பதும், அவரது உண்மையான பெயர் மோகன் குமார் என்பதும் தெரிந்தது. இந்த மோசடியை மோகன் குமார் வீட்டில் வைத்து தான் அனைவரும் திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளனர். சலூன் கடை நடத்தி வந்த மோகன் குமார், பா.ஜனதா பிரமுகர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக தெரிகிறது. மோசடிக்கு ககன் கடூரு மூளையாக செயல்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.