ஆன்லைன் காதலனை கரம் பிடிக்க ஆசையோடு இந்தியா வந்த வங்காளதேச பெண்: காத்திருந்த அதிர்ச்சி
|ஆன்லைன் காதலால் 3 குழந்தைகளுடன் இந்தியா வந்த வங்காளதேச பெண், காதலன் திருமணம் ஆனவர் என அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தன்னுடைய சொந்த நாட்டுக்கே திரும்பினார்.
லக்னோ,
காதலனை வலைதளத்தில் தேடுவது தற்போது அதிகமாகி வருகிறது. ஆன்லைன் காதல் இப்போது நாடு விட்டு நாடு என்கிற அளவுக்கு வந்து விட்டது. காதலனை தேடி இந்தியாவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் சரவஸ்தி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் பர்தா ரோஷன்கர். இந்த ஊரில் பிறந்தவர் அப்துல் கரீம். இவர் பக்ரைன் நாட்டில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.
இந்த சூழலில் அப்துல் கரீம் ஆன்லைன் மூலம் வங்காளதேச நாட்டை சேர்ந்த தில்ருபா ஷர்மி என்ற பெண்ணுடன் நட்பு பாராட்டினார். இந்த பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறியது.
தில்ருபா ஷர்மிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். தில்ருபாவின் கணவர் கொரோனாவின் போது இறந்துவிட்டார். தற்போது 3 குழந்தைகளுடன் தில்ருபா தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி தில்ருபா ஷர்மி தனது 3 குழந்தைகளுடன் கடந்த மாதம் 26-ந் தேதி சுற்றுலா விசாவில் லக்னோ சென்றார். அதே நாளில் அப்துல் கரீம் பக்ரைனில் இருந்து லக்னோ வந்தார். பின்னர் அவர்கள் ஓட்டலில் அறை எடுத்து 2 நாட்கள் தங்கினர்.
பின்னர் அப்துல் கரீம், தில்ருபா ஷர்மி மற்றும் அவரது குழந்தைகளை தனது சொந்த கிராமத்துக்கு அழைத்து சென்றார். அப்போதுதான் அப்துல் கரீமுக்கு திருமணம் ஆனது அவருக்கு தெரியவந்தது.
அப்துல் கரீம் மனைவி மற்றும் கிராமத்தினர் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுத்தனர், அதன் பேரில் நேரில் வந்து அப்துல்கரீம், தில்ருபா ஷர்மிவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தில்ருபா ஷர்மி தனது நாட்டுக்கு திரும்பி செல்வதாக தெரிவித்தார். ஆன்லைன் காதலனை கரம் பிடிக்க ஆசையோடு வந்த பெண் ஏமாற்றத்துடன் வங்காள தேசத்துக்கே திரும்பி சென்றார்.