< Back
தேசிய செய்திகள்
எல்லை கடந்த காதல் சீமா ஹைதர் உளவாளியாக இருக்கலாம் உ.பி. போலீசார் சந்தேகம்...!
தேசிய செய்திகள்

"எல்லை கடந்த காதல் "சீமா ஹைதர் உளவாளியாக இருக்கலாம் உ.பி. போலீசார் சந்தேகம்...!

தினத்தந்தி
|
18 July 2023 4:25 PM IST

நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி சிலர் சீமாவை பாகிஸ்தான் உளவாளியாக கருதி தண்டிக்க கோரியும், சிலர் அவரது காதலுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்

புதுடெல்லி

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (30) இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (23) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்தியா வந்தார். சச்சினுடன் வசித்து வந்தார். காதலன் சச்சினுடன் வாழ தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா ஹைதருக்கு ஜூலை 7 ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இப்போது சீமா பாகிஸ்தான் திரும்ப விரும்பவில்லை. அவர் இந்திய கலாச்சாரத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டதாக கூறி உள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி சிலர் சீமாவை பாகிஸ்தான் உளவாளியாக கருதி தண்டிக்க கோரியும், சிலர் அவரது காதலுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்

சீமா ஹைதரின் மொபைலை ஆய்வு செய்த உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப்படை சீமா அவரது தொலைபேசியிலிருந்து பல தரவு அழிக்கப்பட்டதைக் கண்டறிந்துள்ளது

அவர் எல்லை தாண்டிய காதலரா அல்லது உளவாளியா என்பதை விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையை திசை திருப்புவதற்காக சீமா பல முக்கியமான மொபைல் எண்கள் மற்றும் தகவல்களை அழித்ததாக கூறப்படுகிறது. சீமாவின் மொபைல் போன்களில் இருந்து நீக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ ஆகியவற்றுடன் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப்படை கருதுகிறது. இதனால் தொடர்ந்து அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப்படை விசாரணையில் சீமா இந்தியா வந்ததும் அவர் தொடர்பு கொண்ட முதல் நபர் சச்சின் அல்ல என்றும் அதற்கு முன்பே சீமா இந்தியாவில் சிலரைத் தொடர்பு கொண்டார், அவர்களில் பெரும்பாலோர் டெல்லி-என்சிஆரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.

மேலும் போலீசார் சீமா ஹைதரை ஆங்கிலத்தில் சில வரிகளை வாசிக்க வைத்தார்கள்,அதை சீமா ஹைதர் நன்றாக வாசித்து உள்ளார். அது மட்டுமல்லாமல் அவருக்கு ஆங்கிலத்தில் நல்ல உச்சரிப்பும் இருந்தது.

சீமா ஹைதர் எல்லை தாண்டி இந்தியா செல்ல காரணம் காதல் மட்டுமே என பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாகிஸ்தான் அரசிடம் இந்த அறிக்கையை அளித்துள்ளது.

பாகிஸ்தான் உளவுத்துறையை மேற்கோள் காட்டி பாகிஸ்தானின் செய்தித்தாள் 'ஜங்' இந்த செய்தியை தெரிவித்துள்ளது.

அதில், 'பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர், இந்தியரான சச்சின் மீனாவை திருமணம் செய்ய இந்தியா சென்றார். இதைத் தவிர அவர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா சென்றதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என அறிக்கை பாகிஸ்தான் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்