டெல்லியில் விவசாயிகள் இன்று போராட்டம்
|பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்துகின்றனர்.
ஜந்தர் மந்தரில் ேபாராட்டம்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் (மகா பஞ்சாயத்து) நடத்த முடிவு செய்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் இதற்கும் அழைப்பு விடுத்திருந்தது.
இதை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் ஆக்கிரமித்து இருந்ததால், இந்த போராட்டத்தை தீவிரமாக ஒடுக்க போலீசார் நடவடிக்ைக எடுத்தனர்.
எல்லைகள் மூடல்
அதன்படி அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை அடையும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடியுள்ளனர். அத்துடன் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசாரை எல்லைகளில் காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.
மேலும் ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவிதங்களையும் தவிர்ப்பதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ராகேஷ் திகாயத் கைது
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளரும், சன்யுத் கிசான் மோர்சசா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் திகாயத் நேற்று ஜந்தர் மந்தர் சென்று கொண்டிருந்தார்.
அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்திய ெடல்லி போலீசார், பின்னர் கைது செய்து மது விகார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ேபாலீசாரின் வற்புறுத்தலை தொடர்ந்து அவர் போராட்டக்களம் செல்லாமல் திரும்பி சென்றார். எனினும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் டெல்லி போலீசாரால், விவசாயிகளின் குரலை அடக்க முடியாது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
ஆம் ஆத்மி கண்டனம்
திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன் வைத்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.