< Back
தேசிய செய்திகள்
3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார் அமித்ஷா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தேசிய செய்திகள்

3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார் அமித்ஷா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
3 Oct 2022 8:52 PM GMT

அமித்ஷா வருகையையொட்டி, ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஸ்ரீநகர்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று மாைல காஷ்மீருக்கு சென்றார். அவரை குஜ்ஜார், பேகர்வால் ஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். பா.ஜனதா நிர்வாகிகளும் சந்தித்தனர்.

நவராத்திரியின் இறுதிநாள் என்பதால், இன்று (செவ்வாய்க்கிழமை) மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்று அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

பின்னர், அவர் ரஜவுரிக்கு செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதைத்தொடர்ந்து அவர் காஷ்மீருக்கு செல்கிறார். நாளை (புதன்கிழமை) ஸ்ரீநகரில் நடக்கும் நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். அத்துடன், கவர்னர் மனோஜ் சின்காவுடன் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். அதில், காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

அதன்பிறகு, பாரமுல்லாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.

அமித்ஷாவின் வருகையையொட்டி, காஷ்மீரில் பன்னடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்புக்காக உயர்ரக கேமராக்கள் பொருத்திய டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

ஸ்ரீநகர்-பாரமுல்லா, ஜம்மு-பூஞ்ச் ஆகிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனை நடந்து வருகிறது. ஸ்ரீநகரில் முக்கியமான இடங்களில் போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் ரோந்து தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்