துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்டை 5 கி.மீ. சுமந்து சென்று காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்
|துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்டை பாதுகாப்பு படையினர் சுமார் 5 கி.மீ. சுமந்து சென்று காப்பாற்றினர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் ஹசிபி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்ட்டரில் மாவோயிஸ்டு ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், அவருடன் இருந்த சக மாவோயிஸ்டுகள் அவரை அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றனர். அதனை தொடர்ந்து அந்த மாவோயிஸ்டை பாதுகாப்பு படையினர் மீட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை பாதுகாப்பு படையினர் உணர்ந்தனர்.
ஆனால் அருகில் ஆஸ்பத்திரி ஏதும் இல்லை. இதனால் பாதுகாப்பு படையினர் அந்த மாவோயிஸ்டை தங்களின் தோள்களில் சுமந்து கொண்டு வனப்பகுதி வழியாக சுமார் 5 கி.மீ. நடந்தே சென்று, அவரை தங்களின் முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சையின் மூலம் டாக்டர்கள் அவரின் உயிரை காப்பாற்றினர். அவர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.