ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அமித்ஷாவுக்கு காங். கடிதம்
|பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரை, தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குடியரசு தினத்தையொட்டி, விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று காலை பனிஹல் என்ற இடத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. ராகுல்காந்தியுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லாவும், யாத்திரையில் கலந்து கொண்டார். ராகுல்காந்தியை போலவே அவரும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து நடந்தார்.
தொடர்ந்து நடந்த பாதயாத்திரை காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலான காசிகுண்ட் என்ற இடத்தை அடைந்தது. அப்போது, ராகுல்காந்திக்கான வெளிப்புற பாதுகாப்பு அடுக்கில் இடம்பெற்றிருந்த காஷ்மீர் போலீசாரை காணவில்லை.இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது. பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து நடக்க முயன்ற ராகுல்காந்தியை அவரது பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார். இரவு தங்க திட்டமிட்டு இருந்த அனந்தநாக் மாவட்டம் கானாபாலுக்கு போய்ச் சேர்ந்தார். பாதயாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ராகுல்காந்தி நேற்று காலையில் 11 கி.மீ. தூரம் நடக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், வெறும் ½ கி.மீ. நடந்தவுடனேயே பாதுகாப்பு குளறுபடியால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை அவந்திபோரா பகுதியில் இருந்து தனது யாத்திரையை ராகுல் காந்தி மீண்டும் தொடங்கினார். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் யாத்திரையின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலையிட வேண்டும் என்று அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளர்.