< Back
தேசிய செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்த ஆயுதக்குழு - மணிப்பூரில் பதற்றம்
தேசிய செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்த ஆயுதக்குழு - மணிப்பூரில் பதற்றம்

தினத்தந்தி
|
24 Jan 2024 1:39 PM IST

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூகங்களுக்கு இடையே இன ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, வன்முறை மற்றும் மோதலை தடுக்க மணிப்பூரில் மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களில் உள்ள ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து தாக்குதல், வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில், மெய்தி பிரிவை சேர்ந்த அரம்பை தெங்கோல் என்ற ஆயுதக்குழு இன்று ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மணிப்பூரில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் இந்த ஆயுதக்குழுவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த அனைத்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி ஆயுதக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தலைநகர் இம்பாலில் உள்ள கங்லா கோட்டையில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆயுதக்குழுவினரின் இந்த அழைப்பையடுத்து மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இடத்திற்குள் அரம்பை தெங்கோல் ஆயுதக்குழுவினர் பயங்கர ஆயுதங்களுடன் நுழையலாம் என தகவல் வெளியான நிலையில் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மணிப்பூர் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும்படி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஆயுதக்குழு அழைப்பு விடுத்துள்ள சம்பவத்தால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்