< Back
தேசிய செய்திகள்
2,000 ரூபாய் நோட்டு மாற்றும் பணி - வங்கிகளில் சில்லரை தட்டுப்பாடு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

2,000 ரூபாய் நோட்டு மாற்றும் பணி - வங்கிகளில் சில்லரை தட்டுப்பாடு

தினத்தந்தி
|
25 May 2023 4:18 AM IST

2-வது நாளாக நேற்று 2,000 ரூபாய் நோட்டு மாற்றும் பணி நடைபெற்றது. பல வங்கிகளில் சில்லரை தட்டுப்பாடு நிலவியது.

புதுடெல்லி,

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று கூறியுள்ளது.

வங்கிகளில் 2,000 நோட்டுகள் மாற்றும் வசதி, நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் கூட்டம் இல்லை.

ஆனால், 2-வது நாளான நேற்று, எதிர்பார்த்ததை விட சில வங்கி கிளைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் அங்கு 2,000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக கொடுக்க ரூ.500 மற்றும் அதற்கு குறைவான மதிப்பு கொண்ட நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, அங்கெல்லாம் நோட்டு மாற்றுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ரூபாய் நோட்டு அறையில் இருந்து பணம் எடுத்து வரும் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

ஆனால், பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகள், பண தட்டுப்பாடு ஏற்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்தனர். கனரா வங்கி தலைமை பொது மேலாளர் பாவேந்திர குமார் கூறியதாவது:- டெல்லி சரகத்தில் உள்ள எங்களது அனைத்து கிளைகளுக்கும் ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை தொடர்ந்து அனுப்பி வைத்தோம். எனவே, ரூபாய் நோட்டு மாற்றுவது சுமுகமாக நடந்தது என்று அவர் கூறினார்.

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள சான்றோ, படிவமோ அளிக்க வேண்டியது இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இருப்பினும், சில வங்கி கிளைகளில் அடையாள அட்டை கேட்டதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்