டெல்லியில் ராணுவ தளபதிகள் மாநாடு; நாளை முதல் 5 நாட்கள் நடக்கிறது
|இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளின் தளபதிகள் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் 2 முறை நடைபெறுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் 2-வது மாநாடு டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
ராணுவ தளபதிகள், மூத்த அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் படைகளுக்கான எதிர்கால தேவைகள், திறன் மேம்பாடு, நவீனமயமாக்கலில் முன்னேற்றம், மேம்பட்ட செயல்பாட்டு திறன் திட்டம், தளவாட உற்பத்தியில் தற்சார்பு இந்தியா ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும் புதிய மனிதவள மேம்பாட்டு கொள்கை அமலாக்கம், முற்போக்கு ராணுவ பயிற்சியின் எதிர்கால சவால்கள் என பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறுகின்றன.
"தற்கால இந்திய-சீன உறவுகள்", "தேசிய பாதுகாப்புகான தொழில்நுட்ப சவால்கள்" ஆகிய தலைப்புகளில் பாதுகாப்பு நிபுணர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாநாட்டில் வருகிற 10-ந்தேதி மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தளபதிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் முப்படை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படை தளபதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.