< Back
தேசிய செய்திகள்
பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
6 Feb 2023 5:46 AM IST

அதானி விவகாரம், தனிப்பட்ட கம்பெனி சம்பந்தப்பட்டது. பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

அதானி குழும விவகாரம், ஒரு தனிப்பட்ட கம்பெனியின் பிரச்சினை என்றே நான் கருதுகிறேன். அந்த பிரச்சினையால், இந்தியாவுக்கு நிதி வருவதில் எந்த பாதிப்பும் இல்லை. கடந்த சில நாட்களில் இந்தியாவுக்கு 800 கோடி டாலர் வந்துள்ளது. அதாவது, நமது அன்னிய செலாவணி கையிருப்பு 800 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் பேசி வருகின்றன. மக்களின் கவலைகள் உள்பட அனைத்து பிரச்சினைகள் பற்றியும் பேசி வருகின்றன. எந்த குறிப்பிட்ட கம்பெனிக்கும் அதிக அளவில் கடன் கொடுக்கவில்லை. பங்குச்சந்தையில் இதுபோன்ற தடங்கல்கள், சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ அவ்வப்போது வருகின்றன. ஆனால், அவை தீர்வு காணப்படுகின்றன. பங்குச்சந்தைகள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன.

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான 'செபி', மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை பங்குச்சந்தை சீராகவும், ஸ்திரமாகவும் செயல்பட தங்கள் பணியை செய்ய வேண்டும். அவர்கள் இதை கவனத்தில் கொண்டுள்ளார்கள் என்று நம்புகிறேன். மற்றபடி, மத்திய நிதி அமைச்சகத்தில் இருக்கும் நான் இதுதொடர்பாக எந்த கருத்தும் கொண்டிருக்க விரும்பவில்லை. ஒழுங்குமுறை அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்