'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு; அனைத்து கட்சிகளுடனும் பேசி வருகிறோம் - ஜெய்ராம் ரமேஷ்
|அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து பேசி வருகிறார். நிதிஷ்குமார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களிடமும் பேசி, கூட்டணிக்குள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி பங்கீடு குறித்து 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் மத்தியில் தெளிவு ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது."
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.