< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்:  டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

தினத்தந்தி
|
19 July 2023 3:05 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகள் கூட்டம் தொடங்கியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெற உள்ள சூழலில், இதில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டு உள்ளன.

இதனை எதிர்கொள்ள மத்திய அரசும் தயாராகி வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளன.

இதனை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி கூறும்போது, அனைத்து கட்சிகளும் கூட்டத்தொடரில், ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மற்றும் பிற விசயங்களை மேற்கொள்ளும்படி கேட்டு கொண்டார்.

இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மதியம் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டம் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்தது. இதனை அடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையேற்றார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை நடைபெறுகிறது. இதில், மணிப்பூர் வன்முறை விவகாரம் மற்றும் மத்திய அமைப்புகளை பிறருக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிற விசயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

மேலும் செய்திகள்