காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரம்..!
|காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பூஞ்ச்,
காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான பூஞ்சின் எல்லையோர கிராமம் ஒன்றில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படை கடந்த 20-ந் தேதி இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பட்டா துரியன் என்ற இடத்தில் இந்த வாகனத்தை பயங்கரவாதிகள் வழிமறித்து கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் அவர்கள் போட்ட வெறியாட்டத்தில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. சம்பவம் நடந்த இடம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் ராஷ்ட்ரீய ரைபிள் படையினர் அந்த பகுதியை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
இதற்காக பூஞ்ச்-ரஜோரி மாவட்டங்களுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனினும் இந்த சாலை நேற்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. ஹெலிகாப்டர், டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த தேடுதல் வேட்டையை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. அதேநேரம் சந்தேகப்படும் நபர்களை கைது செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.
அந்த வகையில் 2 தம்பதியர் உள்பட சுமார் 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் ராணுவமும், போலீசாரும் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் தாகுதல் நடந்த பகுதிகளை ஆய்வு செய்து விசாரணையை நடத்தினர். மேலும் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் உச்சபட்ச உஷார் நிலையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதி உபேந்திர திவிவேதி நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். அத்துடன் எல்லை பகுதிகளை ஆய்வு செய்த அவர், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த தாக்குதலில் காயம் அடைந்து உதம்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் நடந்த சம்பவம் குறித்தும் அவரிடம் கேட்டறிந்தார்.
இந்த கொலைவெறி தாக்குதலில் 3 முதல் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் ஒருவர் ராணுவ வாகனத்தின் முன்பகுதியில் இருந்து தாக்குதல் தொடுக்க, மற்றவர்கள் பிற பகுதிகளில் இருந்து துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் வெறியாட்டம் போட்டுள்ளனர். இதனால் ராணுவ வீரர்கள் சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஸ்டீல் தோட்டாக்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இது கவச உடையையும் துளைத்துக்கொண்டு செல்லும் திறன் உடையது என கூறிய அதிகாரிகள், இந்த தாக்குதலுக்கு பின் வீரர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த இடம் பயங்கவாதம் இல்லா பகுதியாக நீண்டகாலமாக அறியப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த தாக்குதல் நடந்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே இந்த சதிச்செயலின் பின்னணியில் இருப்பவர்களை வேட்டையாடும் பணிகளை அவர்கள் முடுக்கிவிட்டு உள்ளனர்.