வட இந்தியாவில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை; 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - 110 பேர் உயிரிழப்பு
|வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், வடகிழக்கு மத்திய பிரதேசம், வடமேற்கு ராஜஸ்தான், ஜம்மு உள்ளிட்ட இடங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. மேலும் இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.