அசாம்: கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை
|கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் கவுகாத்தி, கச்சார், பார்பேடா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கவுகாத்தி உள்ளிட்ட நகர பகுதிகள் அடங்கிய காம்ரூப் மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதிக வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக மாணவர்கள் உடல்நலக்குறைவு மற்றும் மயக்கம் போன்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து காம்ரூப் மாவட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பள்ளிகளின் நிறுவனங்களின் தலைவரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் 'அதிக வெப்பத்தினால் ஏற்படும் தீமைகளிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்காகவும், அதன் மூலம் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.