10ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த ஆசிரியர் கைது
|பாதிக்கப்பட்ட மாணவி, தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்று இந்தி ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளார்.
ததேரு,
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 15 வயது பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீமாவரம் அருகில் உள்ள யண்டகனி ஜில்லா பரிஷத் மேல் நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிபவர் சோமராஜ் (வயது 46). இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் 4 மாதங்களாக பழகி வந்திருக்கிறார் சோமராஜ். மேலும் மாணவிக்கு செல்போன் ஒன்றையும் தந்திருக்கிறார். சமீபத்தில் அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, மாணவியின் கழுத்தில் கட்டாயப்படுத்தி தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இரண்டு நாட்கள் மாணவியை தன்னுடன் கட்டாயப்படுத்தி வைத்திருந்தார்.
பின்னர் மாணவி அங்கிருந்து தப்பித்து தனது குடும்பத்தாரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். பின்னர் தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்று இந்தி ஆசிரியர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியரை கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.