< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

'வீடுகளுக்கே பள்ளி' திட்டம் குழந்தைகளுக்கு பயன் அளிக்கிறதா?

தினத்தந்தி
|
18 Oct 2022 3:44 AM IST

நாட்டிலேயே முதன்முறையாக பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள வீடுகளுக்கே பள்ளி திட்டம் குழந்தைகளுக்கு பயன் அளிக்கிறதா? என்பது குறித்து பெற்றோர், ஆசிரியைகள் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.

பெங்களூரு:

நாட்டிலேயே முதன்முறையாக பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள வீடுகளுக்கே பள்ளி திட்டம் குழந்தைகளுக்கு பயன் அளிக்கிறதா? என்பது குறித்து பெற்றோர், ஆசிரியைகள் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.

வேலை வாய்ப்புகள்

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரமாகும். பெங்களூருவுக்கு பூங்கா நகரம், மென்பொருள் நிறுவனங்களின் குவிந்து இருப்பதால் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற அடைமொழிகளும் உண்டு. மேலும், பெங்களூரு கல்வியில் சிறந்த நகரமாகவும் திகழ்கிறது. இங்கு அரசு-தனியார் பள்ளிகள் மட்டுமின்றி சர்வதேச பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. அதனால் வெளிநாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து படிக்கிறார்கள். அதனால் பெங்களூரு அறிவுசார் நகரமாகவும் இருக்கிறது.

இயற்கையாகவே குளுகுளு நகரமான பெங்களூருவில் மக்கள் தொகை 1.30 கோடியாக அதிகரித்துவிட்டது. கர்நாடகத்தின் தலைநகராக பெங்களூரு விளங்கினாலும், இந்த நகரில் கன்னடர்களின் சதவீதம் 50 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. இங்கு நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் வாழ்கிறார்கள். படித்தவர்கள்-படிக்காதவர்கள் என அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடப்பதால் பிற மாநிலத்தினர் வேலை தேடி பெங்களூரு வருகிறார்கள்.

கூலித்தொழில் செய்கிறவர்கள்

அவர்கள் வேலை கிடைத்ததும் இங்கேயே குடியேறி விடுகிறார்கள். பெங்களூருவின் மிதமான சீதோஷ்ண நிலையால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். கூலித்தொழில் செய்கிறவர்களும், தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து பெங்களூரு வந்து குடிசை பகுதிகளில் குடியிருந்து கட்டிடம் உள்ளிட்ட பிற வேலைகளுக்கு செல்கிறார்கள்.

இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச கல்வி கூட கிடைப்பது இல்லை. மேலும் அரசு பள்ளிகள் இருந்தாலும், அவர்கள் சரியான முறையில் பள்ளிக்கு செல்வதும் இல்லை. அந்த குடிசை வாழ் மக்களின் நிலையை அறிந்து, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனரான தமிழகத்தை சேர்ந்த ராம்பிரசாத் மனோகர், ஒரு புதிய கல்வி திட்டத்தை ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தியுள்ளார். அதன்படி சோதனை அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீடுகளுக்கே பள்ளி என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

விளையாட்டு உபகரணங்கள்

அதாவது, பழைய பஸ்கள் பள்ளி வகுப்பறையாக மாற்றப்பட்டு, பள்ளியில் இருக்கும் அனைத்து வசதிகளும் அதில் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒரு பஸ்சிற்கு ரூ.8 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் தினமும் பெங்களூரு சும்மனஹள்ளி பகுதிக்கு சென்று குடிசை பகுதியில் நிற்கும். அந்த குடிசை வாழ் பகுதி மக்களின் குழந்தைகள் அந்த பஸ் பள்ளி கூடத்திற்கு வருகிறார்கள். அந்த பள்ளியில் 'மான்டசேரி' முறையில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் அந்த பஸ்சில் இருக்கின்றன.

பஸ்சின் உள் பகுதியில் பொம்மைகள், எழுத்துக்கள், சொற்கள் எழுதப்பட்டுள்ளன. ஆடல்-பாடலுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலுடன் அறிவுத்திறன் வளர்க்கப்படுகிறது. இத்தகைய வீடுகளுக்கே பள்ளி திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புதிய முயற்சி என்று கூறி இந்த திட்டத்திற்கு லண்டனை சேர்ந்த ஒரு அமைப்பு விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முக்கிய பங்காற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம்பிரசாத் மனோகர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரின் கருத்து என்ன?

சும்மனஹள்ளி குடிசை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நிற்கும் பஸ் பள்ளியில் படிக்கும் 2 குழந்தைகளின் பெற்றோர் மாரப்பா மற்றும் ரேணுகா ஆகியோர் கூறியதாவது:-

நாங்கள் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கூலி வேலைக்காக பெங்களூரு வந்து பிழைப்பு நடத்துகிறோம். பண்டிகை காலம் மற்றும் ஊாில் ஏதாவது நிகழ்ச்சிகள் என்றால் ஊருக்கு சென்றுவிடுவோம். ஊாில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கவனிக்க ஆள் இல்லை. அதனால் குழந்தைகளை எங்களுடனேயே அழைத்து வந்து விடுகிறோம். அதன் காரணமாக எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பது இல்லை. நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இந்த பஸ் பள்ளி கூடம் இருக்கிறது. அதனால் தினமும் இந்த பள்ளிக்கு எங்களின் குழந்தைகளை அனுப்புகிறோம். இங்கு ஆசிரியைகள் நல்ல முறையில் கல்வி கற்பிக்கிறார்கள். இது எங்களின் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியைகள் கருத்து

சும்மனஹள்ளி பஸ் பள்ளிக்கூட ஆசிரியைகள் மஞ்சுளா, ஷோபா ஆகியோர் கூறும்போது, "இந்த பள்ளிக்கூடத்திற்கு 20 முதல் 30 குழந்தைகள் வரை வருகிறார்கள். காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்குகின்றன. மதியம் 3 மணிக்கு வகுப்புகள் நிறைவடைகின்றன. குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வமாக வருகிறார்கள். ஆனால் எல்லா குழந்தைகளும் தினசரி வருவது இல்லை. மேலும் அவர்களுக்கு உணவோ அல்லது தின்பண்டங்களோ வழங்க முடியவில்லை. அதை அந்த குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் எங்களின் சொந்த செலவில் பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுக்கிறோம். உணவு, தின்பண்டங்கள் கொடுத்தால் அதிக குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கு வருவார்கள். இதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்