< Back
தேசிய செய்திகள்
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
18 May 2024 3:29 PM IST

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார்.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, ரேவண்ணா ஜெர்மனி தப்பிச்சென்றதாக தகவல் வெளியான நிலையில் அவரை கைது செய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வீடியோக்களை வெளியிட கர்நாடக துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கர்நாடக மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் தேவராஜ் கவுடா குற்றஞ்சாட்டியுள்ளார்.

வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ள பா.ஜ.க. தலைவர் தேவராஜ் கவுடா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் நிகாரரிக்கப்பட்ட நிலையில் கோர்ட்டில் இருந்து சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவராஜ் கவுடா,

பிரதமர் மோடி மற்றும் குமாரசாமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்- மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முயற்சித்தார். பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைத்தன.

பிரஜ்வல் ரேவண்ணா பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பான வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை என்னிடம் கொடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிட முயற்சித்தனர். இந்த வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் எனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார். இதற்கான முன்பணமாக பெங்களூருவில் உள்ள பாரோவிங் கிளபில் உள்ள அறை எண் 110க்கு 5 கோடி ரூபாய் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களுடன் சேர்ந்து லஞ்சத்தை நான் வாங்க மறுத்ததால் என் மீது முதலில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்