தேர்தல் ஆணையர்கள் நியமனம்.. புதிய சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
|வழக்கு தொடர்பான மனுவின் நகலை மத்திய அரசின் வழக்கறிஞரிடம் வழங்கும்படி வழக்கறிஞர் விகாஸ் சிங்கிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு செய்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மிக்க குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக மத்திய கேபினட் மந்திரி ஒருவர் இடம்பெறும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியது.
தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் தலைமை நீதிபதியை ஒதுக்கி வைப்பதன்மூலம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை இந்த சட்டம் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். புதிய சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜரானார். 'தயவுசெய்து இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து நிறுத்தி வையுங்கள். இது அதிகாரங்களை பிரித்து வழங்கும் நடைமுறைக்கு எதிரானது' என அவர் வாதிட்டார்.
அப்போது பேசிய நீதிபதிகள், 'எதிர்தரப்பினரின் வாதங்களை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவோம்' என்றனர்.
மேலும், வழக்கு தொடர்பான மனுவின் நகலை மத்திய அரசின் வழக்கறிஞரிடம் வழங்கும்படி வழக்கறிஞர் விகாஸ் சிங்கிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், புதிய சட்டத்தில் தலைமை நீதிபதி பெயர் நீக்கப்பட்டுள்ளது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய மந்திரி ஆகியோர் இடம்பெறுவார்கள் என உள்ளது.
தேர்வுக் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை மோடி அரசு மீறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.