< Back
தேசிய செய்திகள்
ஹிஜாப் தடை நீக்கமா? நீடிக்குமா?; சுப்ரீம் கோர்ட்டில் இந்த வாரம் தீர்ப்பு...!
தேசிய செய்திகள்

ஹிஜாப் தடை நீக்கமா? நீடிக்குமா?; சுப்ரீம் கோர்ட்டில் இந்த வாரம் தீர்ப்பு...!

தினத்தந்தி
|
10 Oct 2022 12:17 PM IST

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் ஹிஜாப் வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டது. ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறை அல்ல என்று கூறிய ஐகோர்ட்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இஸ்லாமிய மத மாணவிகள், இஸ்லாமிய மத அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமந்த் குப்தா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசு, மனுதாரர்களிடம் பல கட்ட விசாரணையை கோர்ட்டு நடத்தியது.

10 நாட்களில் அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்த நீதிபதிகள் கடந்த 22-ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இந்த வாரம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான ஹிமந்த் குப்தா வரும் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால், ஹிஜாப் தடை வழக்கில் இந்த வார இறுதிக்குள் (சனிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்