நாடு முழுவதற்கும் ஒரே மதம்..!! சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி
|நாடு முழுவதற்கும் ஒரே மதத்தை அமல்படுத்தக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ஒரே மதத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. முகேஷ் குமார், முகேஷ் மன்வீர் சிங் என்ற இருவர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதாதன்சு துலியா ஆகியோர் நேற்று விசாரித்தனர்.
அப்போது மனுதாரர்களில் ஒருவர் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதிகள், 'நீங்கள், நாடு முழுவதும் ஒரு அரசியல்சாசன மதம்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் மற்ற மதங்களைப் பின்பற்றுவோரை அவ்வாறு பின்பற்றாமல் உங்களால் தடுக்க முடியுமா? என்னது இது? எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்?' என்று கேட்டனர்.
அதற்கு, தான் ஒரு சமூக ஆர்வலர் என்று கூறிய அந்த மனுதாரர், அரசியல் சாசனத்தின் 32-வது பிரிவின்படி இந்திய மக்கள் சார்பில் ஒரே அரசியல்சாசன மதம் கோரி இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்திருப்பதாக கூறினார்.
அதையடுத்து, அந்த மனு, 1950-ம் ஆண்டு அரசியல் சாசன உத்தரவை ரத்து செய்ய கோருவதாக கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.