சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீனுக்கு எதிரான ஆந்திர மாநில அரசின் மனு தள்ளுபடி
|திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி,
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி ஆவார். கடந்த சட்டசபை தேர்தலில் இவரது கட்சி படுதோல்வி அடைந்தது. தற்போது சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்-மந்திரி ஆனார். இதற்கிடையேதான் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதாவது திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கிடையேதான் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க சந்திரபாபு நாயுடுவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஆந்திர மாநில அரசு தாக்கல் செய்திருந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்கனவே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே முந்தைய உத்தரவைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு அமர்வு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.