மணிப்பூர் மக்கள் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
மணிப்பூர் மாநிலத்தில் இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இதில் பலர் பலியாகினர். இதனையடுத்து மணிப்பூருக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்க வேண்டும், சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
போதுமான பாதுகாப்பு
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது, 'மணிப்பூர் நிலவரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'நிலவரம் மெல்ல மேம்பட்டு வருகிறது. போதுமான பாதுகாப்பு படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன' என வாதிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'கலவரத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாம்கள், ஈடுபடுத்தப்பட்டு உள்ள பாதுகாப்பு படைகள், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த அறிக்கை தொடர்பான ஆலோசனைகளை அளிக்க நேற்று முன்தினம் உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தை நேற்று மீண்டும் விசாரித்தது.
பாதுகாப்பை உறுதி செய்ய...
அப்போது நீதிபதிகள், 'குறிப்பிட்ட பகுதிகளில் ராணுவத்தை பாதுகாப்புக்கு ஈடுபடுத்த பிறப்பிக்கும் உத்தரவு பொருத்தமாக இருக்காது. அது மிகவும் ஆபத்தான போக்காகும். விடுதலை தொடங்கி ராணுவத்தின் மீது அரசு நிர்வாகமும், குடிமக்களும் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
மணிப்பூர் இனக்கலவரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும் உத்தரவிடுகிறோம், கிராமங்கள், வழிபாட்டுத்தலங்களை மறு நிர்மாணம் செய்ய உரிய நிதியை அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.