தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30ந் தேதி வரை அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி
|அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் தேவை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தேர்தல் பத்திரம் செல்லாது என சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஒருமித்த கருத்தாக கடந்த மாதம் அதிரடி தீர்ப்பை வழங்கினர். இதனைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 13-ந்தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.பி.ஐ. தனது மனுவில், அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 12, 2019 முதல் தேர்தல் பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும், பெறப்பட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 6ம் தேதிக்குள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு எஸ்.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.